சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ள முதல் லீக் போட்டி எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது அந்த இரண்டு அணி ரசிகர்களின் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். இந்த இரண்டு அணிகளும் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கின்றன. இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளும் முதல் போட்டியில் விளையாடுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் மூன்றாவது போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதுகின்றன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எந்த மைதானத்தில் விளையாட உள்ளன? என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் நடைபெற உள்ள முதல் மூன்று போட்டிகள் எப்போது என்று பார்க்கலாம்.
மார்ச் 9 அன்று 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடையும் நிலையில், அன்றிலிருந்து சரியாக 12 நாட்களுக்குப் பிறகு 2025 ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. அதாவது மார்ச் 22 அன்று ஐபிஎல் தொடர் துவங்கும். முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கோப்பை வென்ற அணி என்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முதல் போட்டியில் ஆடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மார்ச் 23 அன்று நடைபெறும். அதே மார்ச் 23 அன்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ள போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது. அதிலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
இந்த முறை மொத்தம் 13 மைதானங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகளும் தங்களின் சொந்த மைதானங்களில் விளையாடும். ஆனால் மூன்று அணிகள் மட்டும் இரண்டு மைதானங்களை தங்களின் சொந்த மைதானங்களாக வைத்துக் கொண்டு விளையாட உள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூரில் தனது சொந்த போட்டிகளை விளையாடுவதோடு இரண்டாவதாக கவுஹாத்தியிலும் சில போட்டிகளை விளையாட உள்ளது. அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணி வழக்கமாக தனது சொந்த மைதானமாக வைத்திருக்கும் முல்லான்பூர் மைதானத்துடன் தரம்சாலாவிலும் மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடுவதுடன் விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் சில போட்டிகளில் விளையாடும். மே மாதம் 25 அன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும். அந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
