சென்னை : ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக்கில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை எப்சி அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்பியது. சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி 3-4-1-2 என்ற பார்மட்டிலும், ஹைதராபாத் எஃப்சி 4-2-3-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின.
ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் லூக்காஸ் பிரம்பில்லா உதவியுடன் பந்தை பெற்ற சென்னையின் எஃப்சி அணியின் இர்பான் யத்வாத், கோல் அடிக்க சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியின் அப்துல் ரபீஹ் உதவியுடன் பந்தை பெற்ற ராம்ஹ்லுஞ்சுங்க, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த ஷாட், கோலாக மாறவில்லை. இதனைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க, எடுத்த முயற்சி, போதிய அதிர்ஷ்டம் இன்மையால் கோலாக மாறவில்லை . 23-வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ஆன்ட்ரி ஆல்பா, அடித்த பந்தை, சென்னையின் எஃப்சி அணியின் கோல்கீப்பர் முகமது நவாஷ் அபாரமாக தடுத்தார்.
26-வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் அலெக்ஸ் சாஜி அடித்த பந்து கோம்கம்பதின் வலது போஸ்டில் பட்டு ஏமாற்றம் அளித்தது. 37-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் கியான் நசிரி, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மேல உயரமாக சென்றது. 40-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் லால்டின்லியானா ரெந்த்லி அடித்த கிராஸை பெற்ற இர்பான் யத்வாத், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த ஷாட் இடதுபுறம் விலகிச் சென்றது.
ஆட்டத்தின் பிற்பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதனைத் தொடர்ந்து போட்டியின் முடிவில் சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சென்னையின் எஃப்சி அணிக்கு இது 4-வது வெற்றியாகும். 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னையின் எஃப்சி 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளுடன் 15 புள்ளிகளை பெற்றுள்ளது.